
ஏன் இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட விளை பொருட்களின் விலை அதிகமாக உள்ளது?
மேலே உள்ள கேள்வி ஒரு சாமானியனின் கேள்வியாக உள்ளது இதற்கான விடைகாணும் பொருட்டு ஒரு இயற்கை விவசாயியாக இதை ஒரு சாமானியனுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைக்க இந்த பதிவு.
நீண்ட பதிவிற்கு மன்னிக்கவும் சற்று நேரம் ஒதுக்கி படித்தால் நம் வயிற்றிற்கு இடும் உணவு நல் உணவாக அமையும்.
பொதுவாக விவசாயத்தில் விலை நிர்ணயம் என்பது விவசாயிகளால் 100% நிர்ணயிக்கப்படுவதில்லை!!!
பின் யார் விலை நிர்ணயம் செய்கிறார்கள்?
இடைத்தரகர்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து விளை பொருட்களை கொள்முதல் செய்யும் அரசு கொள்முதல் நிலையங்களும், வியாபாரிகளும் விலை நிர்ணயம் செய்கிறார்கள்.
இதில் விவசாயிகள் பேரம் பேசுவதற்கு கூட வாய்ப்புகள் கிடையாது!!!!
பொதுவாக ரசாயன நெல் விவசாயம் செய்யும் விவசாயிகளிடமிருந்து ₹20 ரூபாய்க்கு குறைவாகவே ஒரு கிலோ நெல் அரசு மற்றும் வியாபாரிகளால் வாங்கப்பட்டு அது சாமானியனுக்கு ஐம்பது ரூபாய்க்கு மேல் அரிசியாக விற்கப்படுகிறது இதில் லாபம் சம்பாதிப்பது வாங்கி விற்கும் வியாபாரிகள் மட்டுமே.
இப்போது நம் கேள்விக்கு வருவோம் இயற்கை விவசாயத்தில் எங்களுக்கு நம்மாழ்வார் ஐயா மற்றும் ஏனைய முன்னோடி இயற்கை விவசாயிகள் கற்றுத்தந்த முதல் பாடம் உற்பத்தி செய்பவரே விற்பனையும் செய்ய வேண்டும். இதைத்தான் நம் தாத்தா மற்றும் பூட்டன் கள் செய்த விவசாயம்.


இப்படி செய்யும்போது விவசாயி ஒரு குறிப்பிட்ட பயிருக்கு எவ்வளவு செலவு செய்து இருப்பார் என்ற கணக்கு அவரிடம் இருக்கும் மேற்கொண்டு அவருடைய உழைப்பு மற்றும் அவர் போட்ட முதலீடு அனைத்திற்கும் மதிப்பிட்டு மேற்கொண்டு அவர் அந்த விவசாயத்தை தொடர்ந்து செய்திட அவருடைய விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வார்.
உதாரணமாக ஒரு ஏக்கர் நெல் விளைவிக்க அரசு நிர்ணயித்துள்ள செலவு தொகை ரூபாய் 30ஆயிரம் நடைமுறையில் பகுதிக்கு தகுந்தார்போல் 35 ஆயிரம் வரை செலவாகும். இதில் ஒரு விவசாயியின் 5 மாத உழைப்பு மற்றும் முதலீடு உள்ளது.
நாற்றங்கால் தயாரிப்பில் இருந்து பலதானியம் விதைத்து (மண்ணில் நுண்ணுயிரி பெருக்கத்தை அதிகப்படுத்த பல தானியத்தின் இலை தலைகளை அவற்றிற்கு உணவாக)
வயலை இரண்டு முறை உழவு செய்து வரப்பு தரித்து வரப்பை சமன்படுத்தி வாய்க்கால்களை சுத்தம் செய்து பின் அடியுரம் இட்டு நெல் நாற்று நடவு செய்து களை எடுத்து இன்னபிற வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் மூலிகை பூச்சி விரட்டிகள் ஆகியவற்றைத் தெளித்து. (வளர்ச்சி ஊக்கிகள் ஆன ஜீவாமிர்தம் பஞ்சகவ்யா மீன் அமிலம் ஆகியவை நாட்டு மாட்டின் சாணம் கோமியம் மற்றும் இன்னும் சில பொருட்களைக் கொண்டு இயற்கை விவசாயி தனது கரங்களால் அதை செய்ய வேண்டும் மற்றும் மூலிகைப் பூச்சிவிரட்டி ஆகியவற்றை அனைத்தும் ஒரு இயற்கை விவசாயியின் தயாரிப்பே ஒரு இயற்கை விவசாயியை நீங்கள் நேரில் சந்திக்கும்போது இவற்றில் ஏதாவது ஒன்று அவரிடம் நிச்சயம் இருப்பு இருக்கும் இவை இல்லாமல் அவர் இயற்கை விவசாயம் செய்ய முடியாது!!!)
கதிர் முற்றி வெளியே வரும்போது மயில் போன்ற பறவைகள் மற்றும் காட்டுப்பன்றி இன்னபிற மிருகங்களிடமிருந்து அதை காவல் காத்து அறுவடை செய்து நெல்லை தூற்றி காயவைத்து அதை சுமார் 2 மாதம் இருப்பு வைத்து நல்ல முதிர்ந்த பிறகு அவற்றை வீட்டு முறையிலோ அல்லது தனிப்பட்ட அனுபவ அவியல் செய்யும் நபர்களிடம் கொடுத்து நெல்லை அவித்து காயப்போட்டு பின்பு அதனை மூட்டை ஆக்கி பாதுகாத்து நுகர்வோர்களின் தேவைக்கு ஏற்ப அதை அந்த நேரத்தில் அரிசியாக்கி விற்பனைக்கு கொண்டுவர சுமார் 8 மாதங்கள் ஆகும்.
இந்த எட்டு மாதங்கள் வரை விவசாயிக்கு அந்த நெல் பயிரில் இருந்து எந்த ஒரு வருமானமும் கிடையாது. நண்பர்களே நீங்கள் சொல்லுங்கள் நீங்கள் யாராவது குறைந்தது இரண்டு மாதம் சம்பளம் வாங்காமல் ஏதாவது ஒரு வேலை செய்வீர்களா? அல்லது ஒரு ஆறு மாதம் கழித்து சம்பளம் கொடுத்தால் நீங்கள் வேலை செய்ய ஒத்துக் கொள்வீர்களா?
ஒரு இயற்கை விவசாயி தனது வயலின் மண்வளத்தை முழுமையாக இயற்கைக்கு மாற்றுவது வரை அவருடைய ஒவ்வொரு மகசூலும் நிச்சயமற்றது. அதாவது சராசரிக்கும் குறைவான அளவே மகசூல் இருக்கும்.
உதாரணமாக ஒரு ரசாயன விவசாயி ஒரு ஏக்கர் நிலத்தில் 24 மூட்டை (1800கிலோ) முதல் 36 மூட்டை (2700கிலோ) 75 கிலோ நெல் ஒரு மூட்டைக்கு அறுவடை செய்வார்.
அதே ஒரு இயற்கை விவசாயி 10 மூட்டை (750கிலோ) முதல் 15 மூட்டை (1125கிலோ) வரை தான் அதுவும் பூச்சித் தாக்குதல்களை திறம்பட கையாண்டால் மட்டுமே சாத்தியம்.
இந்த 1125 கிலோ நெல்லை அரிசியாக மாற்றும் போது அந்த விவசாயிக்கு சுமார் 550 முதல் 600 கிலோ அரிசி கிடைக்கும் இந்த 600 கிலோ அரிசியை அந்த இயற்கை விவசாயி நேரடியாக கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஆறு மாதத்திற்குள் கிலோ 75 ரூபாய்க்கு விற்றால் ரூபாய் 45 ஆயிரம் கிடைக்கும் இதில் அரசு நிர்ணயித்த செலவு 30 ஆயிரம் போக மீதி 15 ஆயிரம் ரூபாய் அவருக்கு சிறுக சிறுக விற்பனையை பொருத்து கிடைக்கும்.
ஒரு இயற்கை விவசாயியின் மண் நன்கு வளம் அடைந்தபிறகு அதை தொடர்ந்து அவர் வளப்படுத்திக் கொண்டே இருக்கும்போது சராசரியாக அவரால் 1800 கிலோ நெல் விளைவிக்க முடியும் அதிலிருந்து சுமார் 990 கிலோ அரிசி கிடைத்து அதை ரூபாய் 75 க்கு விற்கும்போது அதன்மூலம் செலவு 30000 போக அந்த விவசாயிக்கு ரூபாய் 44,250 கிடைக்கும். இந்தத் தொகையை எட்டு மாதத்திற்கு பங்கிட்டால் ரூபாய் 5531 கிடைக்கும். இந்த தொகையை 30 நாட்களுக்கு பங்கிட்டால் ரூபாய் 184.30பைசா ஒரு நாள் சம்பளமாக விவசாயிக்கு கிடைக்கும்.
இதே ரசாயன விவசாயம் செய்யும் விவசாயி அவருடைய நெல்லை நேரடியாக வியாபாரியிடம் அல்லது அரசு கொள்முதல் நிலையத்திலும் விற்று விடுவார். அங்கு அவருக்கு ரகத்திற்கு தகுந்தார் போல் அதிகபட்சமாக நெல் விலை தற்போது 18 ரூபாய் 35 பைசாவிற்கு எடுத்துக்கொள்வார்கள். இதில் 1800 கிலோ உற்பத்தி செய்யும் விவசாயிக்கு ரூபாய் 33000/- 2700 கிலோ உற்பத்தி செய்யும் விவசாயிக்கு ரூபாய் 49545/- அறுவடை செய்த 10 நாட்களுக்குள் அவருடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இவ்வாறு ரசாயன விவசாயிகளிடமிருந்து வாங்கப்படும் நெல் மேற்கொண்டு பல வகையான ரசாயன மேற்பூச்சு மூலம் மேம்படுத்தப்பட்ட நெல் அரவை இயந்திரங்களில் (modern rice mill) மறு உருவாக்கம் செய்து பார்ப்பதற்கு ஒரே நிறமாக ஆக்கி பைகளில் அடைக்கப்பட்டு அந்த அரிசியில் வண்டு வைக்காமல் இருக்கவும் சில இத்யாதி இரசாயனங்கள் சேர்த்து மாநிலத்தின் பல பகுதிக்கும் அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
இதுவே ஒரு இயற்கை விவசாயி டமிருந்து நீங்கள் அரிசி வாங்கும் போது உங்களின் தேவை அறிந்து நீங்கள் பணம் செலுத்திய பிறகு தான் அவர் நெல்லை அரிசியாக மாற்றி உங்களுக்கு கொடுப்பார் ஏனென்றால் அவர் அரிசியாக மாற்றி வைத்திருந்தால் எப்போது விற்பனையாகும் என்று தெரியாது எனவே அது சீக்கிரம் வண்டு வைத்துவிடும்.
எனவே நுகர்வோர்கள் அனைவரும் சற்று சிந்தித்து நாம் உட்கொள்ளும் பெரும்பாலான உணவான அரிசியை இயற்கை முறையில் உற்பத்தி செய்து நேரடியாக விற்பனை செய்யப்படும் ஒரு இயற்கை விவசாயி இடமிருந்து வாங்கி உங்கள் உடல் நலத்தை பேணிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு தங்களின் நலனில் அக்கறையுள்ள ஒரு இயற்கை விவசாயி
இசக்கி நாதன்
இயற்கை விவசாயி
பள்ளக்கால் பொதுக்குடி
அம்பாசமுத்திரம் (தாலுகா)
8667052288 / 8939770207
I am selling Mappilai Samba மாப்பிள்ளை சம்பா and Karuppu Kavuni கருப்பு கவுனி on Vivasayee’s Life online store. Please visit www.vivasayees.life to order 🙂

